அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை; அமெரிக்க தூதரகம் அறிவிப்பு!
அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

B1/B2 விசா - வேலையில் ஈடுபட அனுமதி இல்லை
B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது. B1/B2 விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை.
இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். அதுமட்டுமல்லாது இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்.
அதேவேளை வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.