அமெரிக்க போர் விமானங்களில் வந்தவர்கள் யார்...!
கடந்த பெப்ரவரியில் இலங்கை வந்த அமெரிக்க விமானங்களில் வருகை தந்தவர்களின் விபரங்களை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்றைய தினம் (16.03.2023) உதய கம்மன்பில, குடிவரவு - குடியல்வு திணைக்களத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி “C 17 க்லோப்மாஸ்ட்டர்” (C17 Globemaster) என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
அமெரிக்க இராஜதந்திரிகள்
அந்த இரு விமானங்களிலும் வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்குமாறு கோரியே அவர் அந்தக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் இலங்கைக்கு வந்த அமெரிக்கக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களின் பெயர்கள் என்ன?, வந்தவர்களில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் என்பவரும் இருந்தாரா?,
விஐபி
அத்துடன், குடிவரவு அதிகாரிகள் வந்தவர்களின் கடவுச்சீட்டைச் சரிபார்த்தார்களா?, குடிவரவு அதிகாரிகள் கடவுச்சீட்டில் முத்திரையிட்டார்களா?, அவர்களின் லக்கேஜ்கள் சுங்கச்சாவடி வழியாகச் சென்றதா?, வழக்கமான பயணிகள் முனையம் வழியாக நாட்டிற்குள் நுழைந்தார்களா?, விஐபி டெர்மினலில் இருந்து நாட்டிற்குள் வருகை தந்தார்களா?,
மேலும், சிறப்பு விஐபி டெர்மினலில் இருந்து அவர்கள் வெளியேறினார்களா?, குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளால் அந்த குழுவைச் சோதனையிட வேண்டாம் என்று யாராவது அறிவுறுத்தினார்களா, அப்படியானால், அந்த அறிவுறுத்தலை வழங்கியது யார்? உள்ளிட்ட 8 முக்கிய விடயங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.