கெஹெல்பத்தரவின் சகா பஸ்தேவா 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் "பஸ்தேவா" என்றழைக்கப்படும் திசாநாயக்க தேவகே திசாநாயக்க என்பவரை பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
அதன்படி, குறித்த சந்தேக நபர் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
"பஸ்தேவா" என்ற சந்தேக நபரை கைது செய்த பின்னர், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலில் இருந்து 440 கிராம் போதைப்பொருள் மற்றும் பல வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கெஹெல்பத்தர பத்மே வெளிநாட்டில் இருந்ததாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும், கெஹெல்பத்தர பத்மே கோபமடைந்து தலைமை பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கெஹெல்பத்ர பத்மேவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சந்தேக நபர் செய்த குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய பொலிஸார் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில், இந்த சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.