கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்
தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இந்தக் கடுமையான நெரிசலுக்கு மத்தியிலும் சிறுவர்களுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துவதற்குப் பெற்றோர்களினதும் பாதுகாவலர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளதாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூரண ஒத்துழைப்பு
அதற்கமைய, சிகிச்சைகள் அல்லது கிளினிக் விஜயங்களுக்காக (Clinic Visits) சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் 5 ஆவணங்களையும் கட்டாயமாக எடுத்து வருமாறு பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட சுகாதார இலக்கம் அல்லது பார்ஃகோட் அட்டை
சிறுவர் சுகாதார வளர்ச்சிப் பதிவுப் புத்தகம் / நிறை பதிவுப் புத்தகம்
மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பற்றிய விபரங்கள்
கிளினிக் புத்தகங்கள்
வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் அல்லது நோயறிதல் அட்டைகள்
பொதுமக்கள் இது தொடர்பில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, மேலதிக விபரங்கள் ஏதேனும் தேவைப்படின் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அலுவலகத்தின் 011 2693711 ( நீடிப்பு 307) என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.