ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தற்போது வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 300,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அச்சிட்டு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழுவிடம் விளக்கமளித்த அவர்கள், இந்த வருடத்திற்குள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமமும் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்று மேலும் தெரிவித்தனர்.
வாகன இலக்கத் தகடுகள்
அத்தோடு, மேலதிகமாக ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகளை வாங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
குழுவிடம் உரையாற்றிய தலைவர், நிலுவையில் உள்ள ஓட்டுநர் உரிமங்களை விரைவாக வழங்குவதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் அச்சு இயந்திரங்களை நிறுவுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், விநியோகத்தரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும், அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, இந்த செயல்முறை நிறைவடைந்து, இலக்கத் தகடு வழங்கல் செயல்முறை ஆரம்பிக்கப்படும் என்றும் குழுவிடம் தெரிவித்தனர்.
மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த பயணிகள் போக்குவரத்து கால அட்டவணை குறித்து குழுவில் விவாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த கால அட்டவணை ஒரு கொள்கை முயற்சி என்பதால், குறைபாடுகளைக் கண்டறிந்து, பயணிகளுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்க எதிர்காலத்தில் அதை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சுசார் ஆலோசனைக் குழு தலைவர் தெரிவித்தார். யானைகள் சம்பந்தப்பட்ட தொடருந்து விபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டம் குறித்த விவரங்களையும் தலைவர் வழங்கினார்.
மட்டக்களப்பு பாதையில் இயக்கப்படும் தொடருந்துகளில் யானைகள் மோதுவதை கண்காணித்து குறைக்க நீண்ட தூர கண்காணிப்பு கேமராக்களை நிறுவ ரூ. 2.8 மில்லியன் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.