மலையகத்திற்கான ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் இன்றையதினம் (03-06-2024) மாலை 3.30 மணியளவில் பதுளை - கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்தில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சிங்கமலை சுரங்க வழி பாதை ஆரம்ப இடத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று காலை 9.45 மணியளவில் பதுளை நோக்கி புறப்பட்ட ரயிலே இவ்வாறு தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளது.
குறித்த ரயிலின் கடைசி பெட்டியான காட்சி கூட பெட்டி தடம் புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புகையிரத பயணிகள் எவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், புகையிரத பாதை மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும், குறித்த பெட்டியினை கழற்றிவிட்டு புகையிரதம் கொட்டகலை ரயில் நிலையத்தின் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பதுளையில் இருந்து வரும் ரயில்கள் கொட்டகலை வரையும் கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் ஹட்டன் புகையிரத நிலையங்கள் வரை சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேதமடைந்து ரயில் வீதியினை சீர் செய்த பின் வழமை போல் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ரயில்களில் வருகை தந்த பயணிகளின் அசௌகரிங்களை குறைப்பதற்காக பேருந்துகள் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.