ஆண் குழந்தை இல்லை; பெண் குழந்தை பிறந்ததால் பூசாரி கொலை
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தனக்கு ஆண் குழந்தை என குறி சொன்ன பூசாரி ஒருவரை, பெண் குழந்தை பிறந்ததால் தந்தை மற்றும் மகன் இணைந்து சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், பாரா காலன் கிராமத்திலுள்ள சிவன் கோயில் ஒன்றில் 75 வயதுடைய சுவாமி தேவானந்த் பாரதி பூசாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
ஆண் குழந்தை மீது அதிக நாட்டம்
இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி அவர் கோயில் அருகே சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்துத் தகவலறிந்த பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பூசாரியைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பியோடியமை தெரியவந்தது.
கொலை நடந்த இடத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஹரிந்திரா என்பவரின் புகைப்படம் கிடந்துள்ளது. இதனைக் கொண்டு பொலிஸார் ஹரிந்திராவை விசாரித்த போதிலும், கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தனிப்படை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், ஹசீம் மற்றும் அவரது மகன் ஜீஷன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
பொலிஸாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்துத் தெரியவருகையில்,"ஜீஷனின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவர்களுக்கு ஆண் குழந்தை மீது அதிக நாட்டம் இருந்துள்ளது. வைத்தியசாலைகளில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிவது சட்டவிரோதம் என்பதால், அவர்கள் கோயிற் பூசாரியான சுவாமி தேவானந்த் பாரதியிடம் குறி கேட்டுள்ளனர்.
அப்போது பூசாரி, அவர்களுக்கு 'ஆண் குழந்தைதான் பிறக்கும்' எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எனினும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஜீஷனின் மனைவிக்கு ஆண் குழந்தைக்குப் பதிலாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பூசாரி கணித்தது தவறிப்போனதால் ஆத்திரமடைந்த தந்தையும் மகனும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தங்களின் நீண்டகால எதிரியான ஹரிந்திராவை எப்படியாவது பழிவாங்கும் நோக்கில், பூசாரியைக் கொலை செய்ததன் பின்னர் அந்த இடத்தில் ஹரிந்திராவின் புகைப்படத்தை வேண்டுமென்றே போட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்" என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண் குழந்தை பிறந்ததால் குறி சொன்ன பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அடதிர்ச்சியை ஏற்படுடதடியுள்ளது.