தமிழர் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை; வீதிக்கு இறங்கிய பிரதேசவாசிகள்!
கிளிநொச்சி பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையானது இதுவரை புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற ரயில் கடவையாகவும் காணப்படுகின்றது.
மாற்றுவழிப்பாதை இல்லை
இதனால் புகையிரதகடவை ஆபத்தானதாக காணப்படுவதனால் அதனை பாதுகாப்பான நிரந்தரமான கடவையை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
குறித்த பிரதேசத்தில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் , அங்கு வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதனால் மாற்றுவழிப்பாதை எதனையும் பயன்படுத்த முடியாது உள்ளதாகவும் பிரதேச மக்கள் இவ்வீதியையே பயன்படுத்த வேண்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தமது பிரதேச புகையிரத கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்து தருமாறு கோரி ரயில்வே திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு மகஜர்களையும் அவர்கள் கையளித்துள்ளனர்.