மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைதியின்மை
மன்னார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சாரக் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 24 ஆவது நாளை எட்டியுள்ளது.
இன்றைய போராட்டத்தில் அருட்தந்தை சக்திவேல் உள்ளடங்களாக தென்பகுதியில் இருந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இந்தநிலையில், இன்றைய மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டுவருவோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்திக்குழு தலைவர், அரசாங்க அதிபர் உள்ளடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை வழங்குவதற்கு சென்றிருந்தனர்.
இதன்போது, காவல்துறையினர் அவர்களை மாவட்ட செயலகத்திற்குள் அனுமதிக்காது, வெளியேற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். இந்தநிலையிலேயே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.