யாழில் பாவனைக்கு உதவாத மிளகாய் தூள் தயாரிப்பு ; நீதிமன்றம் கடும் நடவடிக்கை
யாழில் பங்கசு தொற்றுடைய "மிளகாய் தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை குறித்த மிளகாய் தூளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு, கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிகண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகரான மதியானந்தகுரு நந்தகுமார் வியாபர நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது, பங்கஸ் தொற்றுடன் மிளகாய் தூளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளருக்கும், குறித்த கட்டை தூளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, விற்பனையாளரும், உற்பத்தியாளரும் மன்றில் முன்னிலையாகிய நிலையில், தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.
அதனை அடுத்து விற்பனையாளரை கடுமையாக எச்சரித்த மன்று, 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததை தொடர்ந்து உற்பத்தியாளரை கடுமையாக எச்சரித்த மன்று உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்ததுடன் 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.