இலங்கை அணியை போல் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம்; ஜனாதிபதி ரணில்!
இலங்கை அணியினர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகவே ஒரு நாடாக இலங்கையை வெற்றி பெற வைப்பது கடினமான காரியம் அல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு குழுவாக இணைந்து செயற்பட்டமை இலங்கை ஆசிய கிண்ணத்தை கைப்பற்ற உதவியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய கிண்ணம், ஆசிய வலைப்பந்து சம்பியன், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர்.
கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.
அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.