பாதாளக் குழுவினரை கைது செய்தால் நாங்கள் கலங்கமாட்டோம் ; நாமல் ராஜபக்ஷ
ஊழல்வாதிகளையும் பாதாள குழுக்களையும் கைது செய்யும்போது நாங்கள் ஒன்றும் கலக்கமடையவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு அமைச்சரவை அமைச்சர்களுக்கு மாத்திரம் விதிவிலக்காக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்று (5) நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் செய்யாதீர்கள்...
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாதாளக் குழுவினரை கைது செய்யும் போது நாங்கள் கலக்கமடையவில்லை அதற்கான அவசியமும் எமக்கு கிடையாது.கைதுகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்றே குறிப்பிட்டோம்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது ஆனால் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், அதனுடான மரணங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் அந்த பொதுகோட்பாடு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மாத்திரம் விதிவிலக்காக்கப்பட்டுள்ளது.இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
முறைப்பாடளிக்கப்பட்டுள்ளன.ஆனால் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தினர் சட்டப்படி வேலை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டில் மின்கட்டமைப்பு பாதிப்புக்குள்ளாகுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தான் பொறுப்புக்கூற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுரைச்சோலை அனல் மின்நிலையம் ஸ்தாபித்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கடந்த அரசாங்கள் மின்கட்டமைப்பை புதுப்பிக்க கொண்டு வந்த புதிய திட்டங்களுக்கு எதிராக செயற்பட்டார்கள்.வீதிக்கு இறங்கி போராடினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனையை கொண்டு வந்தார்.அந்த யோசனையை தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது என்றார்.