பொலிஸாரிடம் பிடிபட்ட ஆபத்தான நபர் ; பல கோடி ரூபாய் பெறுமதியான பொருள் பறிமுதல்
ஹோமாகம பகுதியில் சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (24) மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை
இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ஹோமாகம ககன' என்பவரின் போதைப்பொருள் வியாபாரத்தை இங்கிருந்து செயற்படுத்துபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ரஞ்சித் பெரேரா எனப்படும் 'கொண்ட ரஞ்சித்' உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரின் போதைப்பொருள் வலையமைப்பை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், இதுவரை 37 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பின் ஒரு பகுதியாக, டுபாய் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளியான 'கொண்ட ரஞ்சி' என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவரும், சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.