பாதாள உலகக் குழு உறுப்பினர் ஹரக் கடாவின் உறவுப் பெண் கைது!
துபாயில் மறைந்திருந்தவாறு பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொஸ்கொட சுஜீயுடன் இணைந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தும் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்டுள்ள, பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ ஹரக் கடா’ என அறியப்படும் மிதிகம நந்துன் சிந்தகவின் பெண் உறவினர் (அத்தை) சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐடியின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறியின் கீழ் செயற்பட்ட சிறப்புக் குழு அவரை இன்று கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. சீதுவை, ரத்தொழுகம பகுதியில் உள்ள ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு வீடு, ஹெரோயின் வர்த்தத்தினால் உழைத்தது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதையடுத்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாக சிஐடியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை கடுவலை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெலிகம கடற்பரப்பின், மிரிஸ்ஸ- பொல்வத்து மோதர கடற்கரை ஊடாக நாட்டுக்குள் கடத்த முயன்ற சுமார் 220 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்டது என நம்பப்படும் 219 கிலோ 800 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அது குறித்த மேலதிக விசாரணைகளில், துபாயிலிருந்து ஹரக் கடா ஊடாக அவை அனுப்பட்டிருந்தமை தெரிய வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.