சிறையில் வாடும் அரசியல் கைதிகள்; தம்பிக்காக காத்திருந்து உயிரை விட்ட அக்கா; தமிழர் பகுதியில் துயரம்
கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் திருகோணமலை தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி புற்றுநோயினால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அந்த சகோதரி,நேற்று முன் தினம் தனது 79வது வயதில், நிறைவேறாக் கனவோடு மரணித்துள்ளார்.

உயிரை விட்ட அக்கா
சகோதரனின் விடுதலைக்காக அரசிடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து அவர் சாவடைந்துள்ளார்.
உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் சகோதரியின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் -நாராயணபுரம், பாலத்தடிச்சேனை இந்து மயானத்தில் வியாழக்கிழமை தகனக்கிரியை செய்யப்பட்டது.
இறுதிக் கிரியையில் குரலற்றோர் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.