தமிழர் பகுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை
மட்டக்களப்பு பிரதேசமொன்றில், 14 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் பெரியப்பாவான 43 வயதுடைய நபருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம்
குறித்த சம்பவம் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம், சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த 14 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
இந்த வழக்கில், அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜராகி வாதாடினர்.
வழக்கு விசாரணைகளின் முடிவில், குறித்த நபர் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கான தண்டனைத் தீர்ப்பு 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்போது, சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியைக் கவர்ந்து சென்ற முதலாவது குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றமான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு குற்றங்களுக்காகவும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, குற்றவாளிக்கு மொத்தமாக 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.