மிக ஆபத்தான காலக்கட்டத்தில் உக்ரைன்! எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு ஆலோசகர்
உக்ரைன் அடுத்த ஒரு வாரம் முதல் பத்து நாளுக்குள் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலைச் சமாளித்துவிட்டால், ரஷ்யாவின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று உக்ரைனின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் வேடிம் டெனிசென்கோ (Vadym Denysenko) தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய அகதிகள் பிரச்சினையைச் சந்திக்கிறது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைன் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
மேலும், அடுத்த ஒருசில தினங்களில் ராணுவ ரீதியாக முக்கியத்துவம் பெற்ற மரியுபோல் (Mariupol) நகரம், தலைநகர் கீவ் ஆகியவற்றை ரஷ்யா கைப்பற்ற முயலும் என்று எதிர்பார்ப்பதாகத் திரு.டெனிசென்கோ கூறினார்.
படையெடுப்பில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரும் என்று குறிப்பிட்ட அவர், அடுத்த ஒரு வாரம் போரில் முக்கியமான காலகட்டம் என்றும் சொன்னார்.
தலைநகர் கீவ் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற ரஷ்யா மனிதாபிமான அடிப்படையில் பாதையைத் திறந்திருக்கிறது. சுமி நகரிலிருந்து சுமார் ஐயாயிரம் பேர் பேருந்துகளின் மூலம் வெளியேறினர்.