நீதவான் நியமனத்திற்கான தகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்
நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட வேண்டிய தகுதிகள்
இதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல், சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணியாற்றிய சட்டத்தரணியாக இருத்தல் ஆகியவை குறித்த தகுதிகள் ஆகும்.
அத்துடன் ஏதேனும் அமைச்சு, திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது பிற அரச நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் குறித்த தகுதிகளில் அடங்கும்.
ஏதேனும் நிறுவனம், வங்கி அல்லது நிறுவனத்தில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் நீதிச் சேவை இரண்டாம் தரத்தின் முதலாம் தர நீதவான் பதவிக்கான தகுதியாகும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த சேவைக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.