பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை பெற்றோருக்கு அனுமதி வழங்க்கியுள்ள நிலையில் ஐந்து வயதுடைய சிறு பிள்ளைகள் உட்பட பலரை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கு பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பிள்ளைகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்வதறியாது தவிக்கும் பெற்றோர்
இது தொடர்பாக உள்துறை அமைச்சு சிறுவர்களுக்கு அனுப்பிய ஐந்து கடிதங்களை 'தி கார்டியன்' நாளிதழ் நேரடியாகப் பார்வையிட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் பேர்ர்த் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளரான வருணி ஆராய்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த உத்தரவினால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். வேதியியலில் முதுகலைப் பட்டதாரியான வருணி, டண்டி பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றவர்.
தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் அவரது கணவர் இயற்பியல் மற்றும் கணிதப் பட்டதாரியாவார். "நாங்கள் 2022 கிறிஸ்மஸ் தினத்தில் இங்கு வந்ததிலிருந்து சட்டப்பூர்வமாகவே வாழ்ந்து வருகிறோம்.

எனது விசா 2031 வரை உள்துறை அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது விசா மூலம் இங்கு வந்த எனது கணவரும், 8 மற்றும் 5 வயதுடைய எனது இரு பிள்ளைகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாங்கள் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை விசா கட்டணமாகச் செலுத்தியுள்ளோம், வரிகளையும் சரியாகக் கட்டுகிறோம், அரசாங்கத்தின் எந்தவொரு சலுகைகளையும் கோரவில்லை" என வருணி கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, அக்டோபர் 2022 இல் பிரித்தானியாவுக்கு வந்து நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மற்றுமொரு பராமரிப்புப் பணியாளரான ரசிக சமரசிங்க என்பவரின் குடும்பத்திற்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
உதவி ஆசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவி மற்றும் 12, 9, 8 வயதுடைய மூன்று பிள்ளைகளுக்கும் விசா நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாகவே செய்தோம். நான் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவன் அல்ல.
எனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே நான் இங்கு வந்தேன். எனது பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள், எனது கடைசிப் பிள்ளைக்கு ஆங்கிலம் மட்டுமே பேசவும் எழுதவும் தெரியும்.
இச்சம்பவத்தை இன்னும் பிள்ளைகளிடம் சொல்லவில்லை, என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருக்கிறோம்" என ரசிக வேதனை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஆறு மாதக் கர்ப்பிணியான பெண் ஒருவர், பிரித்தானியாவில் உள்ள தனது கணவரைப் பிரிந்து சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு கோரும் ஆறாவது கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2024 மார்ச் மாதத்திற்கு முன்னர் வரை, பராமரிப்புப் பணியாளர் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வருபவர்கள் தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைத் தங்களோடு அழைத்து வர அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான கால எல்லையை 5 வருடங்களிலிருந்து 15 வருடங்களாக நீடிப்பதற்கான புதிய முன்மொழிவுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை புலம்பெயர்ந் தோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.