சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் ; திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 116 நாட்களில் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய நிலையில், “இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது; நன்றாகத் தயாராகி வரச் சொல்லுங்கள்” என உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குரல் எழுப்பியதாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, தவெக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உதயநிதி அமைதியாகத் தண்ணீர் அருந்திய காட்சியை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மறுபுறம், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் எவ்வாறு பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பாரா அல்லது எதிர்க்கட்சிகளை விமர்சித்து பதிலளிப்பாரா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.