முதலமைச்சர் விஜய்யின் குட்டிக் கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறிய ‘குட்டிக் கதை’யை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், பேரவைத் தலைவரின் அனுமதியுடன் ஒரு குட்டிக் கதையைக் கூறியிருந்தார்.
அதில், வெயிலில் ஒருவரைத் தேடும் பெரியவர் மற்றும் அவரிடம் கேள்வி கேட்கும் சிறுவன் தொடர்பான கதையை அவர் எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் பேரவையில் பதிலுரை என்ற பெயரில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பேரவை நேரலை ஒளிபரப்பை திரைப்படக் காட்சிபோல் பயன்படுத்தியதாகவும், எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் போன்ற முக்கிய விடயங்களுக்கு முதலமைச்சர் உரிய பதில்களை வழங்கவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளின் போராட்டங்களை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலாக சித்தரித்தது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவையில் கூறப்பட்ட குட்டிக் கதை அவையின் மாண்புக்கு பொருத்தமற்றது என்றும் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.