பெற்ற மகளிடமே பாலியல் வன்கொடுமை ; தப்பியோடிய தந்தை கைது
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முஷர்ரப் என்ற நபருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு தொடர்பான தகவல் கிராமவாசிகள் மூலம் பொலிஸாருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணை முன்னெடுக்கப்படுவதை அறிந்த சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (21) இரவு பதேபூர் காட் – திக்ரி சாலையில் பொலிஸார் மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்.
அவரை கைது செய்ய பொலிஸார் முயன்றபோது, தன்னிடமிருந்த துப்பாக்கியால் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபரின் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன.
படுகாயமடைந்த அவரை பொலிஸார் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.