வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் இரண்டு இலங்கையர்கள்
இஸ்ரேலில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நாடு கடத்தப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனை
குறித்த இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில், உடல் மற்றும் மன ரீதியாக வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களில் ஒருவர் பணியகத்தில் பதிவுசெய்த பிறகு, செப்டம்பர் 2024 இல் இஸ்ரேலிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார் இருப்பினும், அவர் கடந்த இரண்டு மாதங்களாக தனது பணியிடத்திற்குச் செல்லத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சக இலங்கையர்களால் ஜெருசலேமில் இருந்து டெல் அவிவ்க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மற்றைய தொழிலாளி சுமார் ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வருவதாகவும், நீண்டகால போதைப்பொருள் பாவனையால் பணியிடத்துக்கு செல்ல தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.