டிக்கோயா வர்த்தக நிலையத்தில் வெட்டுக் காயங்களுடன் இருவரின் சடலங்கள் ; பொலிஸார் தீவிர விசாரணை
நுவரெலியா டிக்கோயா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இருவர் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று (21) மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்தவர்கள் வயதான இரு ஆண்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும் சம்பவம் இடம்பெற்ற வர்த்தக நிலையத்திலேயே தங்கியிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, டிக்கோயா பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அப்போது, இருவரின் சடலங்களும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இது கொலைச் சம்பவமாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பான தடயவியல் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தோரின் அடையாளங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.