மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – கருவேப்பங்கேணி பகுதியில் வீடொன்றின் கூரையைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், உயர் மின்னழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளரும், அங்கு பணியாற்றிய தொழிலாளி ஒருவரும் வீட்டின் முதலாம் மாடியில் அமைந்துள்ள கூரைப் பகுதியில் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது, மணலை அள்ளிக் கொட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, கூரைக்கு மேலாகச் சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது.
இதனால் முதலில் ஒருவருக்கு மின்சாரம் தாக்கிய நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றைய நபரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்சார சபை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் கருவேப்பங்கேணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.