பணக் கொள்ளை வழக்கு ; முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை
தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளியாகக் காணப்பட்ட சிவிலியன் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.