இரண்டு இன்ஜின்களில் இயந்திர கோளாறு: தாமதமாக வந்த யாழ்.தேவி!
இந்தியாவில் இருந்து புகையிரத திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு M11 locomotive இன்ஜின்கள் கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள இரண்டு நிலையங்களில் செயலிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று (18-02-2022) யாழ்தேவி புகையிரதம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் தாமதமாகியுள்ளது.
காலை 5.50 மணியளவில் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட புகையிரதமானது வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பின்னர் மருதானை புகையிரத நிலையத்தில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மருதானையில் இருந்து காலை 6.40 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த புகையிரத இன்ஜின் பழுதடைந்ததால், மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டதால் சுமார் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.25 மணியளவில் புறப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், போதிய தொழில்நுட்ப வல்லுனர்கள் திணைக்களத்தில் இருந்தும் செயற்படுவதற்கு முன் சரிபார்ப்பதில்லையெனவும் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.