நாட்டில் இருவேறு காலநிலை ; மழையும் வெயிலும் ஒரே நாளில்
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த மழை மற்றும் காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.