இலங்கையில் மூடப்பட்ட இரு தகனச்சாலைகள்!
இரத்தினபுரி மாநகர சபைக்குரிய 2 தகனச்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் நகராதிபதி டிரோன் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
தகனச்சாலைகளில் திருத்தப் பணிகள் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவற்றை மூடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகனச்சாலைகளில் 150 சடலங்கள் தகனம் செய்ததன் பின்னர், தகனச்சாலைகளில் திருத்த வேலைகள் செய்ய வேண்டும் என்றும் எனினும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 8 தொடக்கம் 10 சடலங்கள் தகனம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்தமுறை பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் இதுவரை 700க்கு அண்மித்த சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே குறித்த 2 தகனச்சாலைகளையும் திருத்தம் செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் இரத்தினபுரி மாநகர சபையின் நகராதிபதி தெரிவித்துள்ளார்.