குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது
பாதாள உலகக் குழுத் தலைவனும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான "பாணந்துறை குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்ஷித்தவின் நெருங்கிய சகாக்கள் இருவர் பாயாகலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை பாயாகலையின் நிர்மலவத்தை மற்றும் கும்புருகொட ஆகிய பகுதிகளில் விசேட சோதனைகள் நடத்தப்பட்ட போதே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் “பெத்தா” (பெதும்) என்ற புனை பெயருடனும் “கவிய” (கவிந்து) என்ற புனை பெயருடனும் அழைக்கப்படுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட “பெத்தா” என்பவரிடமிருந்து 42,350 மி.கி. ஐஸ் போதைப்பொருளும் “கவிய” என்பவரிடமிருந்து 48,170 மி.கி ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த இருவரும் பயாகலை பகுதியில் தலைமறைவாகியிருந்து அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களுக்குத் திட்டமிட்ட முறையில் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாலன ஊழல் தடுப்புப் பிரிவினரும் பயாகலை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.