திருச்சி கிழக்கு தொகுதியில் அனுதாப அலைக்காக காத்திருக்கும் மு.க.ஸ்டாலின்
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார்.
அங்கு தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார். இந்த முடிவு தி.மு.க. தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்
இதன் மூலம் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அந்தத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக போட்டியிடக்கூடும் என்ற அரசியல் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் அனுதாப அலைவை பயன்படுத்தி வெற்றி பெறும் வாய்ப்பை மு.க.ஸ்டாலின் கணக்கிடுவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீண்டும் களமிறக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை தவெக சார்பில் போட்டியிட வைக்கவும் யோசனைகள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கனிம வளக் கொள்ளைகளைத் தடுக்க தனித்துறை அமைத்து, அதன் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் கட்சியினரின் யோசனையாகும். இத்தகைய அரசியல் நகர்வுகள் மத்தியில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்படக்கூடிய இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.