சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது!
புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லு ஆலங்க தோனி கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இச் சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (04.08.2023) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சட்டவிரோதமாக பீடி இலைகளை முச்சக்கர வண்டியில் கடத்துவதற்கு முற்பட்டு வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, சுமார் 16 உறைகளில் 500 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் கரைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் வனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ,கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியன புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.