தனக்கென தனிப்பாதை அமைத்த டிரம்ப்!
தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடங்கியுள்ளார்.
சமூக ஊடகங்களில் இருந்து ட்ரம்ப் (Donald Trump) வெளியேற்றப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, ‘உண்மை சமூகம்’ (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்யேக சமூக வலைதளத்தை நேற்று தொடங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘
நான் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தைத் தொடங்கியுள்ளேன். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அடாவடித்தனத்துக்கு சவால்விடும் வகையில் இதனைத் தொடங்கியுள்ளேன். சமூக வலைதளங்களில் தலிபான்கள் அதிகளவில் இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு இடமில்லை. நான் ப்ளாக் செய்யப்பட்டேன். இது ஏற்புடையதல்ல’ என அவர் கூறினார்.
மேலும் அடுத்த மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் கொண்ட விடியோ சேவையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அப்போது ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் (Donald Trump), குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.