ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் ; உண்மையான சூத்திரதாரிகள் விரைவில் அம்பலமாவார்களா?
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது தற்போதைய அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைத்து வரும் கருத்துக்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறான கருத்துக்களை அரசாங்கம் வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எவரும் பொய்யான கருத்துக்களை வெளியிடக் கூடாது.
இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து எமக்குத் தெளிவான புரிதல் உள்ளது.
உதய கம்மன்பில சூத்திரதாரிகள் தொடர்பான புத்தகமொன்றை வெளியிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு, அதில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியிருந்தனர்.
எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சித்தாலும் உண்மையை மறைப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் உண்மையான சூத்திரதாரிகளை அடையாளம் காண்பது தொடர்பில் அரசியல் தரப்புகளுக்கு இடையே தொடர்ந்தும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.