பிரித்தானியாவில் ஈழத்தமிழரின் கடை உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை ; 40,000 பவுண்டுகள் அபராதம்
பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் (Birmingham) நகரில் ஈழத்தமிழருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாகப் பணியாளர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டதுடன், அவருக்கு உரிய குறைந்தபட்ச ஊதியத்திலும் குறைவான தொகை வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கடையின் உரிமத்தை ரத்து செய்ய பிரித்தானிய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு ஏற்கனவே 40,000 பிரித்தானிய பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்தத் தொகை செலுத்தப்படாத நிலையில், கடையின் விற்பனை உரிமத்தை ரத்து செய்யுமாறு உள்துறை அமைச்சகம் விண்ணப்பித்துள்ளது.
பேர்மிங்ஹாமின் கிங் ஸ்டாண்டிங் பகுதியில் உள்ள காலேஜ் வீதியில் அமைந்துள்ள குறித்த கடையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் குடிவரவு அமலாக்கப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின்போது, இந்தியப் பிரஜை ஒருவர் கடையில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நண்பர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அந்தக் கடையில் பணியாற்றி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாரத்தின் ஏழு நாட்களும் நாளொன்றுக்கு ஐந்து மணித்தியாலங்கள் வேலை செய்ததாகவும், ஒரு மணித்தியாலத்திற்கு வெறும் 6 பிரித்தானிய பவுண்டுகள் மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடையின் பணப்பெட்டியிலிருந்து தனது ஊதியத்தைத் தானே எடுத்துக்கொள்வதாகவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்போது, குறித்த நபரின் மாணவர் விசா 2022 ஆம் ஆண்டு மே மாதத்துடன் காலாவதியாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
விசா நீடிப்புக்காக அவர் பலமுறை விண்ணப்பித்திருந்த போதிலும், அவை நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கடையின் உரிமையாளராக தேவராஜா ஹரிஹரனும், உரிமம் பெற்றவராக அன்டனி மில்ஸ் செபஸ்டியன் பிள்ளையும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அண்மையில் குறித்த கடையின் உரிமத்தை மற்றுமொருவரின் பெயருக்கு மாற்றுவதற்கான விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னர் அவரது குடிவரவு மற்றும் வேலை செய்வதற்கான அனுமதி தொடர்பான ஆவணங்களை உரிய முறையில் சரிபார்க்கத் தவறியமை, குறைந்த ஊதியம் வழங்கி தொழிலாளரைச் சுரண்டியமை உள்ளிட்ட காரணங்களால், கடை நிர்வாகம் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, சட்டவிரோத வேலைவாய்ப்பைத் தடுப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், 40,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தப்படாததையும் கருத்திற்கொண்டு கடையின் விற்பனை உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த கடையின் உரிமத்தை ரத்து செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் விண்ணப்பம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.