ஆசிரியை பஹ்மிதாவுக்கு எதிராக திட்டமிட்ட சதி: நீதி வேண்டும்! மஹ்தி எம்.பி
திருகோணமலையில் உள்ள சண்முகா இந்துக் கல்லூரியில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதிக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று (02-01-2022) புதன்கிழமை கிண்ணியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பாடசாலையில் அவருக்கான ஆடை சுதந்திரம் பறிக்கப்பட்ட போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை செய்த போது குறிப்பிட்ட ஆடையை அணிந்து செல்வதற்கு தடை ஏற்படுத்த முடியாது என தீர்வு வழங்கப்பட்டிருந்தது.
மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனித உரிமை ஆணைக் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தக் கோரி ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அவருக்கு சாதகமான நிலைப்பாட்டை தெரிவித்திருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் அதே பாடசாலைக்கு சென்று உங்களுடைய பணியைத் தொடருங்கள் என்று கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன் பிரகாரம் இன்று பாடசாலைக்கு சென்ற வேளை அதிபர் குறிப்பிட்ட ஆசிரியரை ஒப்பமிட அனுமதி மறுத்ததோடு தனது கடமையை செய்வதற்கும் பெற்றோர், பழைய மாணவர்களை தூண்டிவிட்டு தாக்குதலை நடாத்தி இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
குறித்த திட்டமிட்ட சதியை வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு இனங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்க இடமளிக்கக்கூடாது என்றும் சம்மந்தப்பட்டவர்கள் அவருக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதோடு இந்த சதி வேலைகளை திட்டமிட்டு அரங்கேற்றியவர்களுக்கு நீதியின் பிரகாரம் விசாரணை செய்து தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.