சுற்றுலாப் பயணிகளிடம் பண மோசடி; பொலிஸாரின் பிடியில் சாரதி
நேபாளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறுகிய பயணத்திற்கு 30,000 ரூபாய் அதிகமாக பணம் வசூலித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம்
குறித்த சந்தேகநபரின் வாகனம் மற்றும் உடல் தோற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனை நடவடிக்கையின் போது, போக்குவரத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பிரேசில் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த பெண்கள் இருவரிடம் இது போன்ற சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்களிடம் இருந்து குறுகிய பயணங்களுக்கு முறையே ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சிறிய குழுவினரின் இத்தகைய மோசடி நடத்தை, இலங்கையின் சுற்றுலாத் துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அங்கீகரிக்கப்படாத தொகைகளை வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து சேவை வழங்குநர்களையும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.