திருகோணமலை சிசு மரண விவகாரம் ; தொழிற்சங்க நடவடிக்கைக்கும் அதற்கும் தொடர்பில்லை; GMOA
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவத்திற்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சங்கத்தின் உப தலைவர், விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ, பிரசவ அறை சிகிச்சைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அடங்குவதால், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது வைத்தியர்கள் ஒருபோதும் அவசர சிகிச்சைகளில் இருந்து விலகிச் செல்வதில்லை என குறிப்பிட்டார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் ஒரு தரப்பினர் திட்டமிட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்த போதிலும், அது குறித்து தமக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான அறிவித்தல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், குறித்த வைத்தியர்கள் கடமை தவறியதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் தங்களது கடமை நேரத்திற்குப் புறம்பான நேரத்திலேயே தனியார் சேவையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு வைத்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
கடமை நேரத்தில் கடமையைப் புறக்கணித்து தனியார் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் குறித்த வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர் ஒருவரும், சிரேஷ்ட விடுதி வைத்திய அதிகாரி ஒருவரும் அடங்குகின்றனர்.
பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக பிரசவ அறைக்கு வருமாறு அங்கிருந்த விடுதி வைத்திய அதிகாரியால் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் குறித்த இரு வைத்தியர்களும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர்கள் அரச கடமை நேரத்தில் தனியார் பிரிவில் பணியாற்றியதுடன், அந்த நேரத்தில் அரச வைத்தியசாலையில் கடமையில் இருந்ததாக கடமைப் பதிவேட்டில் (Duty Diary) பொய்யான தகவல்களைப் பதிவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற ஏப்ரல் 09ஆம் திகதி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாளாகும். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதேச மட்டத் தலைவராவார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் முறையான ஒழுக்காற்று விசாரணையை சுகாதார அமைச்சு விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.