திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம் ; தேரர் குழுவின் நில கோரிக்கை சர்ச்சையில்
திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை பார்வையடுவதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர் இன்று(18) சென்றிருந்தனர்.
இதன்போது, தற்போது உள்ள இடம் போதாது.. ஒரு ஏக்கருக்கும் அதிகமான இடமொன்றை கோரவேண்டும் என அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், பல தடைகளை தாண்டி மீண்டும் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது.
மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது. 5 வருடங்களுக்கு தான் அரசாங்கத்துக்கு பலம் கிடைக்கும்.
ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. அது எப்போதும் மாறாது. இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது.
இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம்...இதுவே கடைசி இனி இவ்வாறு நடக்காது. பௌத்த மத விழுமியங்களுக்காக நாங்கள் போராடுவோம் என தெரிவித்தார்.