திருகோணமலையில் அடுத்தடுத்து மூன்று விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி!
திருகோணமலையில் 3 இடங்களில் ஒரே முச்சக்கர வண்டி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இவ்விபத்தில், அறுவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) இரவு 7.00 மணியளவில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
திருகோணமலை Dockyard Street -யில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடந்து சென்ற ஒருவர் மீது மோதி அங்கிருந்து தப்பிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி மீண்டும் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்களில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்களினால் முச்சக்கரவண்டி நிமிர்த்தி எடுக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி திருகோணமலை பிரதான வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதிய நிலையில் பொதுமக்களினால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த அறுவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.