பெண் நாடாளுமன்ற அதிகாரியின் இடமாற்றம் உடனடியாக இடைநிறுத்தம்!
பெண் நாடாளுமன்ற அதிகாரி ஒருவரின் இடமாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது .
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு, பாராளுமன்றப் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான குஷானி ரோஹனதீரவிற்கு ஒரு விசேட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, பாராளுமன்ற நிர்வாகத் திணைக்களத்தின் நிறுவனப் பணியகத்தில் கடமையாற்றி வந்த ஒரு சிரேஷ்ட பெண் அதிகாரியின் இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்றத் தலைவர்களால் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம்
இச்சம்பவத்திற்குப் பின்னணியாக, பாராளுமன்றத் தலைவர்களால் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் அமைந்துள்ளது. குறித்த அதிகாரி உட்பட ஒன்பது ஊழியர்களுக்கு, இம்மாதம் 20ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இடமாற்றங்களை வழங்குவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
அத்தீர்மானத்தின் பிரகாரம், குறித்த அதிகாரியை 'பொது மனுக்கள் குழு' சார்ந்த கடமைகளுக்கு இடமாற்றம் செய்வதற்குப் பொதுச் செயலாளர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
எனினும், தனக்கு வழங்கப்பட்ட இந்த இடமாற்றம் தொடர்பில், குறித்த அதிகாரி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிடம் ஒரு முறைப்பாட்டை அ முன்வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையைப் பரிசீலித்த ஆணைக்குழு, குறித்த இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றப் பொதுச் செயலாளருக்கு கடந்த 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது.