மட்டக்களப்பில் சட்டவிரோத நடவடிக்கையால் பரிதாபமாக பலியான இளைஞன்!
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை தேடி விவசாயிகள் சென்ற போது, பொலிசார் என நினைத்து, மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய குலேந்திரன் இந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிரான் பிரதேசத்தில் பெண்டுகள்சேனை, பூலாக்காடு பகுதியிலுள்ள வயல் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், இரவில் அதிரடிப்படையினரின் ரோந்து நடைபெறுவதால், அதிகாலை வேளையில் வயல் நிலங்களில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று, தமது வயலில் மணல் அகழும் தகவலறிந்த விவசாயியொருவர், வேறு சிலருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் தொலைவில் நடமாட்டத்தை அவதானித்து பொலிசார் வருகிறார்கள் என கருதி தெறித்து ஓடியுள்ளனர்.
ஒரு இளைஞன் அங்கிருந்து தப்புவதற்காக ஓடிச் சென்று அருகிலுள்ள மாதுறுஓயாவின் கிளையாறான கம்பித்துறை ஆற்றில் குதித்துள்ளார். 20 அடி ஆழமான ஆற்றிற்குள் குதித்த இளைனிற்கு நீச்சல் தெரியாத என கூறப்படுகின்றது.
எனினும் அங்கு சென்றவர்கள் விரைந்து செயற்பட்டு அவரை மீட்ட போதும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேசன் தொழிலில் ஈடுபட்ட அந்த இளைஞன் அதிக சம்பளம் கிடைக்கும் என கடந்த 2 வாரங்களாகவே சட்டவிரோத மணல் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம்.ரம்ஸின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.