மரமும் மின் கம்பமும் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு(Photos)
நுவரெலியா மற்றும் கண்டி பிரதான வீதியில் மரமொன்று மின் கம்பமொன்றின் மேல் முறிந்து விழுந்தில் வீதியினூடான போக்குவரத்து இன்று (5) புதன்கிழமை காலை முதல் தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.
இன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த மரமும், மின் கம்பமும் முறிந்து விழுந்துள்ளபோதும் எவருக்கும் காயமேற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து, பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
நுவரெலியா பிரதான நகருக்கு மின் இணைப்பை வழங்கும் கம்பம் முறிந்து விழுந்துள்ளமையால் பிரதான நகருக்கான மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது.
அத்துடன் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சேதம் ஏற்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக வீசும் கடும் காற்றால் , பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.