நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள்!
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு முதல் தடவை
மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்கும், அது குறித்த ஒரு கருத்தாடலைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு “ Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் பெறுமதி குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பெறுமதியான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
அதேவேளை யாழ்ப்பாண வலய மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.