இறந்தவர் வீட்டிற்கு சாப்பாடு கொடுக்கும் மரபில் மாற்றம் தேவை!
இறந்தவர் வீட்டுக்குச் சாப்பாடு கொடுக்கும் மரபிலும் மாற்றம் தேவையாக உள்ளது. ஒரு வீட்டில் ஒருவர் இறந்தால் அவர்கள் துக்கத்துடன் இருப்பார்கள். தொழிலுக்குச் சென்று உழைக்க மாட்டார்கள். ஆகவே நாம் 3 வேளையும் உணவு கொண்டு சென்று கொடுக்க வேண்டும். என்ற பண்பாடு முன்னைய காலத்தில் தோற்றம் பெற்றது.
அவ்வாறு சாப்பாடு கொண்டு வந்து தருபவர்கள் விபரங்களை ஒரு கொப்பியில் குறித்து வைத்து பின்னர் அவர்களது வீடுகளில் மரணம் நிகழும் போது கொடுப்பார்கள். இது உண்மையிலேயே மிகவும் நல்ல பண்பாடு.
சில கிராமங்களில் செத்த வீடு நிகழ்ந்தால் வரும் உறவினர் நண்பர்கள் மரண ஊர்வலம் முடிந்து போகும் போது கையில் காசுத் தாளை வைத்து விட்டுப் போவார்கள். அதனையும் குறித்து வைத்துக் கடனாக வைத்திருந்து பின்னர் கொடுப்பார்கள்.
இது இன்றளவும் தொடருகிறது. இறந்தவர்களது வீட்டார் உழைப்பு பிழைப்புக்குப் போக மாட்டார்கள். ஆகவே பணத் தேவைகளுக்கு இறுதிச் செலவுகளுக்கு உதவும் என்பதே காரணம். இது இன்றளவும் தொடர்ந்தாலும் விரயம் ஏதுமில்லாத நல்லதொரு பண்பாடு.
ஆனால் சாப்பாடு கொடுக்கும் பண்பாட்டில் முன்பின் அறிவிக்காமல் பலரும் சென்று கொடுப்பதால் விரயமாகும் நிலையைப் பல இடங்களில் காண்கிறேன். சாப்பாட்டை யாருக்கும் கொடுத்து முடிப்பதற்குப் பாடுபடுகின்றனர்.
இறந்தவர் வீட்டில் சாப்பிட்டால் துடக்கு. 31 நாளும் கோயிலுக்குப் போக முடியாது. விரதங்கள் அனுஸ்டிக்க முடியாது என்ற ஓர் பழக்கம் பரவலாகத் தொற்றி விட்டது.
ஆனால் பசியுடன் வாழ்ந்த மக்கள் அதிகம் பேர் இருந்த முன்னைய காலத்தில் இப்படித் துடக்குப் பார்த்தோர் மிகவும் குறைவாகவே இருந்தனர். சாப்பாடு வழங்குவோர் முன்னறிவித்தல் கொடுத்து விட்டு வழங்கினால் விரயத்தைத் தடுக்கலாம்.
அல்லது அரிசி மா, அரிசி, மரக்கறிகள், ரின்மீன், மிளகாய் தூள், உப்பு,உள்ளி, மிளகு, சீரகம், தேங்காய், பருப்பு, தேங்காய் எண்ணை, தேயிலை, சீனி, என உலர் உணவுப் பொருள்களாகக் கொடுக்கலாம்.
இது பயன் மிகுந்தது. விரயத்திற்கு இடமில்லை. யாரும் உணவு தராத நாள்களில் சமைத்து உண்ணலாம். நான் இந்த வகையே பெரும்பாலும் பின்பற்றுகிறேன். நல்ல பணக்கார வீடுகளுக்கே போட்டி போட்டுக் கொண்டு பலரும் சாப்பாடு கொடுப்பதையும் கண்டிருக்கிறேன்.
ஏழை வீட்டுக்குக் கொடுப்பதில் பின்னடிப்பார்கள்.
ஏனென்றால் திருப்பித் தர மாட்டார்களே என்ற சுயநலம் தான் ?
ஆகவே இறந்தவர் வீட்டுக்குச் சாப்பாடு கொடுக்கும் மரபில் மாற்றம் தேவை. என முகநூலில் வேதநாயகம் தபேந்திரன் என்பவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.