அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப் போவதாகப் பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாம் எதிர்பார்த்த நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்திப் பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர், அதிபர் மற்றும் சுகாதாரத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் நாளை (23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.

ஏனைய பல அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துறைகளும் இந்தப் போராட்டத்தில் இணையவுள்ளன.
ஆயினும், நாளைய போராட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், அதற்குப் பதிலாக எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி தமது சொந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் கோரி நாட்டின் பல பகுதிகளிலும் ஆசிரியர்கள் இன்றும் (22) தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை, நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து மாற்றத்தை நோக்கிய யுகத்துக்கு” எனும் தொனிப்பொருளில் கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.