இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் ; இலங்கைக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள்
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “ரூபாய் - ரூபாய்” வர்த்தக முறையின் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; நள்ளிரவில் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் முதல் ஆண்டிலேயே வர்த்தகப் பரிமாற்றம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
புதிய “ரூபாய் - ரூபாய்” வர்த்தக முறைமை இரு நாடுகளினதும் பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் இருதரப்பு வர்த்தகத்திற்காக அமெரிக்க டொலரை சார்ந்திருக்கும் நிலை குறைவதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் கையிருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாணய மாற்றங்களால் ஏற்படும் இழப்புகள் மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைச் செலவுகள் குறைவதுடன், அமெரிக்க டொலருக்கான தேவை குறைவதன் மூலம் உள்நாட்டு நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையும் மேம்படும் என அவர் விளக்கினார்.
இந்த முயற்சிக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நிதிப் பரிவர்த்தனைகளை வலுப்படுத்த இலங்கையின் மத்திய வங்கி இந்தியத் தரப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் “ரூபாய் முதல் ரூபாய் வரை: இந்திய – இலங்கை வர்த்தகப் பெருவழியை வலுப்படுத்துதல்” என்ற உயர்மட்ட வட்டமேசை மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கொள்கை வகுப்பாளர்கள், வங்கியியலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிய திட்டத்தின் கீழ், கொழும்பில் இயங்கும் இந்திய வங்கிகள் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யும் இலங்கை வர்த்தகர்களுக்கு இந்திய ரூபாயில் நேரடியாக கடன் வழங்க முடியும்.
அதேபோன்று, இலங்கை வங்கிகளும் டொலர் மாற்றீடு இன்றி வர்த்தக நிதியளிப்பதற்காக இந்திய ரூபாயில் கடன்களைப் பெற முடியும். தற்போது பிரித்தானியாவை முந்தி, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான வருடாந்த ஏற்றுமதி 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி 5 பில்லியன் டொலர்களை நெருங்கியுள்ளது.
குறிப்பாக, இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்குத் தேவையான சுமார் 2.6 பில்லியன் டொலர் பெறுமதியான மூலப்பொருட்கள் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், புதிய ரூபாய் வர்த்தக முறைமை இந்தத் துறைக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் 25ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தோ–லங்கா வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் “இந்தியா டெஸ்க்” அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு முகவரான GITA மூலம் இயக்கப்படும் இந்த பிரிவு, இலங்கை வர்த்தகர்கள் இந்தியச் சந்தையை எளிதாக அணுகவும், அங்குள்ள ஒழுங்குமுறை வழிகாட்டல்களைப் பெறவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.