காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; நள்ளிரவில் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்
தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் மருத்துவ நிபுணரின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நள்ளிரவு வேளையில் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (24) யாழ்ப்பாணத்தில் மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாறுவேடத்தில் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாவகச்சேரி கைதடி பகுதியில் வைத்து மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் அவரது நண்பரும், குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதியுமான மற்றொருவரை நுவரெலியா பொலிஸாரின் விசேட பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று (25) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சந்தேகநபர் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, படுகொலை செய்யப்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரும் அங்கு வருகை தந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரும், சந்தேகநபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.