இளைஞனுக்கு எமனான உழவு இயந்திரம் ; துயரில் உறவுகள்
கலென்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உபுல்தெனிய, பஹலகம ஏரி அணையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அணையில் இருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பிரேத பரிசோதனை
விபத்தில் உயிரிழந்தவர் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என கலென்பிந்துணுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய நடவடிக்கைகளுக்காக சில தினங்களுக்கு முன்னரே குறித்த இளைஞர் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
அவர் உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரது உழவு இயந்திரத்தில் சாரதியாகப் பணியாற்றி அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
விபத்து நடந்த தினத்தன்று, உழவு இயந்திர உரிமையாளரின் வயல் நிலங்களை உழுது முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, உழவு இயந்திரம் ஏரி அணையில் இருந்து கீழே கவிழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (26) சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பாக கலென்பிந்துணுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.