இன்று வருடத்தில் ஒருமுறை வரும் மகா சங்கடஹர சதுர்த்தி ; சிறப்பு வாய்ந்த விரதம்!
மகா சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மகா சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.
இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் ஒரு ஆண்டில் வரும் அனைத்த சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் மகாசங்கடஹர சதுர்த்தி
இத்தகைய சிறப்பு மிக்க மகாசங்கடஹர சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகயான இன்று அமைந்துள்ளது. மகா சங்கடஹர சதுர்த்தி என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் மிக முக்கியமான நாளாகும்.
விநாயகரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும், விநாயகரின் அருளால் அனைத்து விதமான துன்பங்கள், கஷ்டங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற நாளாக இந்த மகா சங்கடஹர சதுர்த்தி கருதப்படுகிறது.

புதிதாக விரதம் இருப்பவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் துவங்கி, அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கலாம்.
இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம், தடை இருந்தாலும் விலகி விடும் என்று சொல்லப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை, மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

வழிபாட்டு முறை
இந்த நாளில் நாள் முழுவதும் உபவாசமாக இருந்து விநாயகரை வழிபடலாம். அப்படி முடியாதவர்கள் பால், பழங்கள், கிழங்கு வகைகள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். நாள் முழுவதும் விநாயகரின் திருநாமங்களை சொல்லியபடி இருக்க வேண்டும்.
மாலையில் சந்திர தரிசனம் செய்து விநாயகரை வழிபட்டு, சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து , விநாயகர் முன்பாக விளக்கேற்றி வழிபட வேண்டும்.

மாலை நேரத்தில் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். விநாயகருக்கு உகந்த அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும்.
விநாயகருக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.
விரத பலன்கள்
சங்கடங்கள் தீரும். கடன் தொல்லை நீங்கும். புத்தி கூர்மை, கல்வி ஞானம் ஏற்படும். ஒரு ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.